Thursday 15 December 2011

ஆன்றோர் சான்றோருடன் ரேணுகாதேவியும் நானும்

பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டிகளில் பேச ஆரம்பித்த காலத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக மேடைப்பேச்சு  கற்றுக்கொண்டேன். அம்மா, அப்பா, சித்தப்பா, பக்கத்துக்கு வீட்டு பேங்க் அங்கிள் போன்றோர்களால் எழுதிக்கொடுக்கப்பட்டதை  மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தவன், எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் சுயமாக எழுதி பேசலானேன்.

வழக்கமாக, ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் முதற்கண் வணக்கம் சொல்வதை நிறுத்திவிட்டு நேரடியாக விஷயத்துக்குள் போகிற புரட்சியை அந்த நாட்களில் நான் செய்தது என் தமிழாசிரியர் உள்ளிட்ட பலரையும் முகஞ்சுளிக்க வைத்தது. அஃதேபோல், கட்டுரைப் போட்டிகளிலும் முன்னுரை, பொருளுரை, முடிவுரை தவிர்த்தேன். அதுகாலம் தொட்டு, தமிழாசிரியர்கள் பலரும் என்னைத்  திமிரனாகப் பார்க்கத் துவங்கினர். எனக்கு போட்டியாக ரேணுகா தேவி என்கிற பத்தாம் வகுப்பு மாணவியைத் தயார் செய்தனர்.

தொடர்ந்து வந்த சுதந்திர தின விழாவில், ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கிய ரேணுகாவின் பேச்சு என்னைக் கொஞ்சம் நடுங்கச் செய்தது. அவளது குரல் வன்மையாக இருந்தது. தெளிவான உச்சரிப்பு வேறு. எனக்குக் கொஞ்சம் சன்னமான குரல். என் உச்சரிப்பு படு மந்தமாக இருக்கும். அவள் பேசி முடித்ததும் பலத்த கரகோஷம்.

அடுத்து பேச வந்த மாணவன் வழக்கம் போல முதற்கண் வணக்கத்தை சொல்லிவிட்டு காந்தி, நேரு, பகத்சிங் பற்றி பேசிகொண்டிருக்கும் போதே பாதியில் ஸ்ட்ரக் ஆகி ஆன்றோரையும் சான்றோரையும் மீண்டும் வணங்கிவிட்டுக் கீழிறங்கினான். மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.

"கிறுக்குத்தனமாக எதாச்சும் பேசித் தொலைக்காதே." கணக்கு வாத்தியார் அக்கரை காட்டினார். தூரத்தில் உட்கார்ந்திருந்த தங்கை (ஆறாம் வகுப்பு) என்னைக் காட்டி தன் தோழியிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தாள். மேடையில், ஒலிப்பெருக்கி சரிசெய்யப்பட்ட பிறகு, ரேணுகாவைப் பார்த்தேன். சிரித்தாள். ஆள் தெ பெஸ்ட் சொல்வதை அவளது உதட்டசைவைப்  பார்த்தே புரிந்து கொண்டேன். கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

எப்படியாவது பரிசு வாங்கியே ஆகணும் என்கிற தீர்மானத்தோடு பேசத் துவங்கினேன். மேடையில் வீற்றிருந்த ஆன்றோர்களையும் சான்றோர்களையும் நான் வணங்காதது யாருக்கும் ஏமாற்றமில்லை. சன்னமான, உச்சரிப்பு சுத்தமில்லாத குரலில், சுதந்திர இந்தியாவில் நாம்என்ன செய்ய வேண்டும் என்பது போல் பேசி, அதில் நடைமுறை சாத்தியமற்ற பலதையும் கலந்து, எங்கே எப்படி நிறைவு செய்வதெனத் தெரியாமல் காந்தியின் மரணத்தில் கொண்டுபோய் முடித்தேன். கடைசியில் மகாத்மா காந்திக்கு ஜே சொன்னபோது எல்லோரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

ரேணுகா என்னை "இங்கே வா" என்றாள்.  

"நான் நல்லா பேசினேனா க்கா"

"ம்...  நீ மகாத்மா காந்திக்கு ஜே சொன்னதும், நானும் என் கிளாஸ் புள்ளைங்களும் தான் மொதல்ல ஜே போட்டோம். அதுக்கப்புறந் தான் எல்லோரும் சொன்னாங்க தெரியுமா?"

2 comments: