Monday, 26 December 2011

பெருமகிழ் செய்தலால்...உன்னைத் தேடிவருகிற
எல்லோரையும் மகிழ்விக்கிறாய்.
நீ வெட்கப்படுவதில்லை.
உனக்குக் கூச்சம் இல்லை.
மெல்லிய மேகம் போன்ற
உடலை வல்லிய உணர்சிகளால்
மூடி வைத்திருக்கிறாய்.
உணர்சிகளைக்
கிழித்து உன் உடலை
நுகரும் சக்தி
கொண்டவர்கள் குறைவு.

அது சரி...
நீ உள்வாங்கிய
உயிரணுக்களை
என்ன செய்கிறாய்?
அதை வைத்து
ஒரு கொள்ளிக்கட்டையாவது
தயார் செய்திருக்கலாம்.

Saturday, 17 December 2011

தோற்றப் பிழை.ரங்கய்யா தெருவா இது.?

இடது திருப்பத்தில்
ஒன்றல்ல இரண்டு
தென்னை மரங்கள்

நான்கைந்து நாய்கள்
ஊளையிட்ட தெரு
வாகனக் கூட்டத்தில்
நெருக்கப்பட்டிருக்கிறது.

"கோபால் மெஸ்"
பெயர்ப்பலகையின் கீழ்
மொய்க்கிற மக்களை
இப்போது பார்க்கிறேன்.

பேருந்து நிழல் குடையில்
போத்தீஸ் விளம்பரம்

வீட்டு வாசலில்
துளசிச் செடி.

கொடியில் உலரும்
நீலப் புடவை
ஊதா ரவிக்கை

அன்றாடம் கடந்து
போகும் பாதை
இன்றெனக்கு
அந்நியப்படுகிறது.

கதவு திறக்கப்படுகிறது.
முதன் முறை
பகலில் பார்க்கிறேன்
அவளை.

Friday, 16 December 2011

சரவணன் மற்றும் நிரோஷா

பலருக்கு நிரோஷாவைத் தெரியும்
சிலருக்கு  சரவணனைத் தெரியும்
எனக்கு இருவரையும் தெரியும்

ஸ்பின்னிங் மில் வேலை
வார சம்பளம் அவனுக்கு.
ஓட்டி பார்பான்.

அவள் கல்யாணம் காட்சிக்கு
சமைக்கப் போவாள்.
அப்பா சமையல் காரர்.

பள்ளிக்கூடத்தில் அவன் யாரோடும்
அதிகம் பேசி பார்த்ததில்லை.
வீட்டுக்கு வந்தாலும்
காக்கி டிராயர்தான்

நிரோஷா கலகலப்பானவள்.
குழந்தைகள் பிடிக்கும்
கால்கொலுசு பிடிக்கும்

கடிதம் எழுதிவைத்து
காணாமல் போனான் சரவணன்.
மெட்ராஸ் போயிருப்பான் என்றார்கள்.

தேடினார்கள்
கிடைக்கவில்லை.

பலருக்கு நிரோஷாவைத் தெரியும்
சிலருக்கு  சரவணனைத் தெரியும்

எனக்கு மட்டும் தெரியும்  
நிரோஷா என்கிற சரவணனை.

Thursday, 15 December 2011

புணர்ச்சி பழகுதல் வேண்டா

பூட்டிய அறையினுள்
இரண்டே வாய்ப்புகள்
ஒன்று கதவைத் திறப்பது
அல்லது காதலைத் திறப்பது.
காதலை ஒதுக்கி
கதவைத் திறக்கிறோம்
கதவோரம் பல்லிகள் இரண்டு
காதலைத் திறந்தன.

மோகச்செருக்கு

காதலும் காமமும்
ஒரு சேர இயங்கின
நாட்களைக் கடந்தாயிற்று.

இரண்டும் தனித்தனியே
துரிதமாக என்னை
இயக்குகின்றன

இவ்விரண்டின்
எதிரெதிர் இழுப்புகளில்
பிய்ந்து போகிறது
மெய்யுயிர்.

முதல் கோணல்.

முதல் மாதச் சம்பளம்
ஆயிரத்து இருநூறென்று
நினைவு. சில்லறையாக
இருபதோ முப்பதோ.

சுரேஷ், செந்தில்.
அரை பாட்டில் பிராந்தியோடு
மூவரும் அறுவரானோம்.

இரண்டு பெட்டி சிகரெட்
முட்டைப் பொறியல்,
பூந்தி, சிப்ஸ்.
கடைசி பெக்கில்
வீட்டு ஞாபகம.

உள்சட்டைப் பைக்கு
போனது எழுநூறு.

இருவரும்
நன்றி நவின்று
கிளம்பினர்.

அம்மாவுக்கு
ஒரு ஊதாப் புடவை
அப்பாவுக்கு அதே நிறத்தில்
ஒரு சட்டை.
வெகுநேரம் தேடி
தங்கைக்கு பச்சை
சுடிதார் ஒன்று.

வீட்டு வாசலில்
அப்பா செருப்பு.
பிய்ந்திருந்தது.

இன்னாசி முத்தான்.

காடு பார்த்தல் கூரை வேய்தல்
ஆடு மேய்த்தல் கூடை முடைதல்
சீவனம் .

ஏர்பூட்டினால்  கோவணம்
நீர்பாய்ச்சினால் அரை டிராயர்
எப்போதாவது பழுப்புக் கைலி.

செய்யது பீடி காதில் இருக்கும்
சாராயப் பழக்கமுண்டு.

தண்டுவன்
தாசி போனதில்லை.

சின்னக்கொட்டகை தரை டிக்கெட்
தின்னக் கொஞ்சம் சோளப்பொறி
பொழுதுபோக்கு.

விறகொடித்துக் கொடுப்பன்
தண்ணீர் தெளித்து எரிப்பர்
ஊரில் சில பத்தினிகள்.

காப்பித் தண்ணி, டீத்தண்ணி
சாராயம் குடிக்க வெளியே ஒடுங்கி
உள்ளே நசுங்கிய
அலுமினிய டம்ளர்
அவனைப்போலவே

வாசற்கோலங்கள்
வீட்டுக்குள் போவதில்லை.

ஓருடல் மூவுயிர்

ஈரச்சவுரியில்
சூடிச் சூடி வாடிய
மல்லிகை.

மாறாத மாநிறம்
அடிக்கடி மாறும்
மாநிலம்.

தமிழ் பேசுவாள்
படிக்கத் தெரியாது.

பேரன் லவ்லி
கோகுல் சாண்டல்
வயதை குறைக்கும்

இரவு யாவாரம்
வாழ்க்கை வெளிச்சம்

தரகனுக்கும்
போலீசுக்கும் போக
அறநூறு தேறும்.

மூத்தவள் ஆறாவது
சின்னவன் ஒன்னாவது

அவனின் சாமிகள்.
ஏட்டுசாமிக்கு நான்னா
உசிரு. வண்டி கழுவனு
சீரட்டு வாங்கியாரனு
பொழுதோட வாரையில
அஞ்சு ரோவா தருவாரு

நாட்டு வெத்தல ரெண்டு
அம்ப்தாசு நெஜாம் பாக்கு
வாங்கியாந்தா  சிரிப்பாரு
மனீகாரு.

ஊர் கவுன்ட்ருக்கு
ரெண்டூடு. பெரீய் கவுனிச்சி
ரெம்ப நல்ல டைப்பு.
 சின்னக் கவுனிச்சிக்கு
என்னையக் கண்டாலே
ஆவாது.

நோம்பி கீம்பி சாட்டுனா
நானாருன்ருகீங்க?
ராசாவாக்கும்.
நானில்லாட்டி
ஒண்ணுன் நெடக்காது

இந்தூர்ல அல்லாருக்கு
ஒரு சாமி தா
நமக்கு அல்லாருமே
சாமி தா.

ஆன்றோர் சான்றோருடன் ரேணுகாதேவியும் நானும்

பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டிகளில் பேச ஆரம்பித்த காலத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக மேடைப்பேச்சு  கற்றுக்கொண்டேன். அம்மா, அப்பா, சித்தப்பா, பக்கத்துக்கு வீட்டு பேங்க் அங்கிள் போன்றோர்களால் எழுதிக்கொடுக்கப்பட்டதை  மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தவன், எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் சுயமாக எழுதி பேசலானேன்.

வழக்கமாக, ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் முதற்கண் வணக்கம் சொல்வதை நிறுத்திவிட்டு நேரடியாக விஷயத்துக்குள் போகிற புரட்சியை அந்த நாட்களில் நான் செய்தது என் தமிழாசிரியர் உள்ளிட்ட பலரையும் முகஞ்சுளிக்க வைத்தது. அஃதேபோல், கட்டுரைப் போட்டிகளிலும் முன்னுரை, பொருளுரை, முடிவுரை தவிர்த்தேன். அதுகாலம் தொட்டு, தமிழாசிரியர்கள் பலரும் என்னைத்  திமிரனாகப் பார்க்கத் துவங்கினர். எனக்கு போட்டியாக ரேணுகா தேவி என்கிற பத்தாம் வகுப்பு மாணவியைத் தயார் செய்தனர்.

தொடர்ந்து வந்த சுதந்திர தின விழாவில், ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கிய ரேணுகாவின் பேச்சு என்னைக் கொஞ்சம் நடுங்கச் செய்தது. அவளது குரல் வன்மையாக இருந்தது. தெளிவான உச்சரிப்பு வேறு. எனக்குக் கொஞ்சம் சன்னமான குரல். என் உச்சரிப்பு படு மந்தமாக இருக்கும். அவள் பேசி முடித்ததும் பலத்த கரகோஷம்.

அடுத்து பேச வந்த மாணவன் வழக்கம் போல முதற்கண் வணக்கத்தை சொல்லிவிட்டு காந்தி, நேரு, பகத்சிங் பற்றி பேசிகொண்டிருக்கும் போதே பாதியில் ஸ்ட்ரக் ஆகி ஆன்றோரையும் சான்றோரையும் மீண்டும் வணங்கிவிட்டுக் கீழிறங்கினான். மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.

"கிறுக்குத்தனமாக எதாச்சும் பேசித் தொலைக்காதே." கணக்கு வாத்தியார் அக்கரை காட்டினார். தூரத்தில் உட்கார்ந்திருந்த தங்கை (ஆறாம் வகுப்பு) என்னைக் காட்டி தன் தோழியிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தாள். மேடையில், ஒலிப்பெருக்கி சரிசெய்யப்பட்ட பிறகு, ரேணுகாவைப் பார்த்தேன். சிரித்தாள். ஆள் தெ பெஸ்ட் சொல்வதை அவளது உதட்டசைவைப்  பார்த்தே புரிந்து கொண்டேன். கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

எப்படியாவது பரிசு வாங்கியே ஆகணும் என்கிற தீர்மானத்தோடு பேசத் துவங்கினேன். மேடையில் வீற்றிருந்த ஆன்றோர்களையும் சான்றோர்களையும் நான் வணங்காதது யாருக்கும் ஏமாற்றமில்லை. சன்னமான, உச்சரிப்பு சுத்தமில்லாத குரலில், சுதந்திர இந்தியாவில் நாம்என்ன செய்ய வேண்டும் என்பது போல் பேசி, அதில் நடைமுறை சாத்தியமற்ற பலதையும் கலந்து, எங்கே எப்படி நிறைவு செய்வதெனத் தெரியாமல் காந்தியின் மரணத்தில் கொண்டுபோய் முடித்தேன். கடைசியில் மகாத்மா காந்திக்கு ஜே சொன்னபோது எல்லோரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

ரேணுகா என்னை "இங்கே வா" என்றாள்.  

"நான் நல்லா பேசினேனா க்கா"

"ம்...  நீ மகாத்மா காந்திக்கு ஜே சொன்னதும், நானும் என் கிளாஸ் புள்ளைங்களும் தான் மொதல்ல ஜே போட்டோம். அதுக்கப்புறந் தான் எல்லோரும் சொன்னாங்க தெரியுமா?"

நேசவாகனம்

"கார்ல ஏறிக்கோ"
"ம்.. ஏறிட்டேன்"

படுக்கையறையிலிருந்து
வரவேற்பறை வழியாக
சமையலறைக்குச் சென்றோம்.

அங்கிருந்த விமானத்தில் ஏறி
மீண்டும் படுக்கையறை
வந்தடைந்தோம்.