Friday, 13 January 2012

இருப்புப் பாதை
ஒரு ரயில்நிலைய நெடு-நாற்காலியில்
அவனும் அவளும் அமர்ந்திருந்தனர்.
அவனுக்கான ரயில் வந்து நிற்கிறது.
அவளுக்கான ரயிலுக்கு
அரைமணி நேரம் காத்திருக்கவேண்டும்.

இருவருக்கான ரயிலும்
எதிரெதிர் திசையிலானது.

இருவரிடமும் நேற்றிரவு
விழித்திருந்த கலக்கம்

இதோ... அவனுக்கான ரயில் கிளம்புகிறது.
தன் உடமைகளை வாரிக்கொண்டு
உள்ளேறுகையில், அவளுக்கான ரயில்
வந்துகொண்டிருக்கிறது.

அடுத்த புதன்கிழமையில்
காலையோ மதியமோ மீண்டும்
இவர்கள் சந்திக்கக் கூடும்.

அப்போது நிறைய பாசிமாலைகளும்,
லேகிய உருண்டைகளும்
மிருகமுடித் தாயத்துகளும்
விற்றுத் தீர்த்திருப்பார்கள்.

Monday, 26 December 2011

பெருமகிழ் செய்தலால்...உன்னைத் தேடிவருகிற
எல்லோரையும் மகிழ்விக்கிறாய்.
நீ வெட்கப்படுவதில்லை.
உனக்குக் கூச்சம் இல்லை.
மெல்லிய மேகம் போன்ற
உடலை வல்லிய உணர்சிகளால்
மூடி வைத்திருக்கிறாய்.
உணர்சிகளைக்
கிழித்து உன் உடலை
நுகரும் சக்தி
கொண்டவர்கள் குறைவு.

அது சரி...
நீ உள்வாங்கிய
உயிரணுக்களை
என்ன செய்கிறாய்?
அதை வைத்து
ஒரு கொள்ளிக்கட்டையாவது
தயார் செய்திருக்கலாம்.

Saturday, 17 December 2011

தோற்றப் பிழை.ரங்கய்யா தெருவா இது.?

இடது திருப்பத்தில்
ஒன்றல்ல இரண்டு
தென்னை மரங்கள்

நான்கைந்து நாய்கள்
ஊளையிட்ட தெரு
வாகனக் கூட்டத்தில்
நெருக்கப்பட்டிருக்கிறது.

"கோபால் மெஸ்"
பெயர்ப்பலகையின் கீழ்
மொய்க்கிற மக்களை
இப்போது பார்க்கிறேன்.

பேருந்து நிழல் குடையில்
போத்தீஸ் விளம்பரம்

வீட்டு வாசலில்
துளசிச் செடி.

கொடியில் உலரும்
நீலப் புடவை
ஊதா ரவிக்கை

அன்றாடம் கடந்து
போகும் பாதை
இன்றெனக்கு
அந்நியப்படுகிறது.

கதவு திறக்கப்படுகிறது.
முதன் முறை
பகலில் பார்க்கிறேன்
அவளை.

Friday, 16 December 2011

சரவணன் மற்றும் நிரோஷா

பலருக்கு நிரோஷாவைத் தெரியும்
சிலருக்கு  சரவணனைத் தெரியும்
எனக்கு இருவரையும் தெரியும்

ஸ்பின்னிங் மில் வேலை
வார சம்பளம் அவனுக்கு.
ஓட்டி பார்பான்.

அவள் கல்யாணம் காட்சிக்கு
சமைக்கப் போவாள்.
அப்பா சமையல் காரர்.

பள்ளிக்கூடத்தில் அவன் யாரோடும்
அதிகம் பேசி பார்த்ததில்லை.
வீட்டுக்கு வந்தாலும்
காக்கி டிராயர்தான்

நிரோஷா கலகலப்பானவள்.
குழந்தைகள் பிடிக்கும்
கால்கொலுசு பிடிக்கும்

கடிதம் எழுதிவைத்து
காணாமல் போனான் சரவணன்.
மெட்ராஸ் போயிருப்பான் என்றார்கள்.

தேடினார்கள்
கிடைக்கவில்லை.

பலருக்கு நிரோஷாவைத் தெரியும்
சிலருக்கு  சரவணனைத் தெரியும்

எனக்கு மட்டும் தெரியும்  
நிரோஷா என்கிற சரவணனை.

Thursday, 15 December 2011

புணர்ச்சி பழகுதல் வேண்டா

பூட்டிய அறையினுள்
இரண்டே வாய்ப்புகள்
ஒன்று கதவைத் திறப்பது
அல்லது காதலைத் திறப்பது.
காதலை ஒதுக்கி
கதவைத் திறக்கிறோம்
கதவோரம் பல்லிகள் இரண்டு
காதலைத் திறந்தன.

மோகச்செருக்கு

காதலும் காமமும்
ஒரு சேர இயங்கின
நாட்களைக் கடந்தாயிற்று.

இரண்டும் தனித்தனியே
துரிதமாக என்னை
இயக்குகின்றன

இவ்விரண்டின்
எதிரெதிர் இழுப்புகளில்
பிய்ந்து போகிறது
மெய்யுயிர்.

முதல் கோணல்.

முதல் மாதச் சம்பளம்
ஆயிரத்து இருநூறென்று
நினைவு. சில்லறையாக
இருபதோ முப்பதோ.

சுரேஷ், செந்தில்.
அரை பாட்டில் பிராந்தியோடு
மூவரும் அறுவரானோம்.

இரண்டு பெட்டி சிகரெட்
முட்டைப் பொறியல்,
பூந்தி, சிப்ஸ்.
கடைசி பெக்கில்
வீட்டு ஞாபகம.

உள்சட்டைப் பைக்கு
போனது எழுநூறு.

இருவரும்
நன்றி நவின்று
கிளம்பினர்.

அம்மாவுக்கு
ஒரு ஊதாப் புடவை
அப்பாவுக்கு அதே நிறத்தில்
ஒரு சட்டை.
வெகுநேரம் தேடி
தங்கைக்கு பச்சை
சுடிதார் ஒன்று.

வீட்டு வாசலில்
அப்பா செருப்பு.
பிய்ந்திருந்தது.